×

நீர்நிலைகளில் கிடுகிடுவென குறையும் நீர்மட்டம் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருமயம், பிப். 11: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கோடை காலம் துவங்கும் முன்னரே கிடுகிடுவென நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் கவலையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் அங்குள்ள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப போதுமான நீர்நிலைகள், வரத்துவாரிகள், விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் அரிமளம், திருமயம் பகுதியில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள், வரத்து வாரிகள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.

அதேநேரம் பருவமழையும் போதுமான அளவு பெய்யாததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக நீர்நிலைகளை நம்பியிருந்த காலம்போய் தற்போது நிலத்தடி நீரை நோக்கி சென்றுவிட்டனர். இதனால் நீர் நிலைகளும், வரத்துவாரிகளும் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது ஒருபுறமிருக்க குப்பை, செடி கொடிகளால் நீர்நிலைகள், வரத்துவாரிகள் தூர்ந்து போயின. இந்நிலையில் அரிமளம், திருமயம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயம் என்பது கேள்விகுறியாகி விவசாயிகளும் விவசாயத்தில் பயனில்லையென கருதி கூலி வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரிமளம், திருமயம் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்களே குடிநீருக்காக தள்ளாடும் நிலையில் விவசாயிகள் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு பருவமழை குறிப்பிடதகுந்த அளவு அதிகமாக பெய்தது. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்தது. இருந்த போதிலும் விவசாயத்துக்கு போதுமான நீர் இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்யாமல் கண்மாய், குளங்களில் உள்ள நீரை கோடை காலத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தொடர் வறட்சியால் ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்த நீர் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதற்கேற்றார்போல் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு போயின. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அரிமளம், திருமயம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடை காலத்தில் அரிமளம், திருமயம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா