×

பாடாலூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

பாடாலூர், பிப். 12: பாடாலூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி மணல் கடத்தி செல்லப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஆலத்தூர் தாலுகா பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், பாடாலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் ஆனந்தன், திலீப் ராஜா ஆகியோர் ஆலத்தூர் கேட்- செட்டிகுளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. அந்த லாரியில் 6 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த லாரியை சோதனை செய்தபோது டிரைவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் வளவங்கோடு தாலுகா நாகச்சேரிவிளை கிராமத்தை சேர்ந்த தாவீது மகன் வில்சன் (44) என தெரியவந்தது.

இதையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன், லாரியை பறிமுதல் செய்தார். மேலும் அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Patalur ,
× RELATED பாடாலூரில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா