×

ஆரம்பநிலை கல்வியில் அணுகுமுறை மாற்றம் தேவை

நாகை,பிப்.12: 2019 ம் ஆண்டிற்கான ஏசர் (Annual survey education report) ஆய்வறிக்கை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
நமது தேசத்தின் கல்வியின் மீது அக்கறையுள்ளவர்கள் ஆண்டு தோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஓர் அறிக்கையாக இது அமைந்துள்ளது. 2019 ம் ஆண்டுக்கான ஆய்வில் ஆரம்ப வருடங்களான நான்கு முதல் எட்டு வயதில் உள்ள குழந்தைகளை எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் 24 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500 கிராமங்கள் 1700 ஆர்வலர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 36 ஆயிரத்துக்கு மேலான குழந்தைகளிடம் நேரடியாக கேள்வி கேட்டு கணக்கு போட செய்து அதனை அலசி ஆராய்ந்து 192 பக்க அறிக்கையாக வெளியாகியுள்ளது. எனவே இந்த அறிக்கையின் நம்பகத் தன்மை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த அறிக்கை வெளியானதும் மாணவர்களுக்கு எளிய எண் கணக்கு கூட தெரியவில்லை. வாசிக்க தெரியவில்லை என்று ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் மீது பழி போடுவது வரும் வாரங்களிலும் நடக்கத்தான் போகிறது. விரைவில் புதிய தேசியக் கல்வி கொள்கை வெளியிடப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அறிக்கையில் நமக்கு பல தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒற்றை இலக்க இரட்டை இலக்க எண் கூட்டல் கழித்தல் கணக்குகள், இடம் பற்றிய கேள்விகள் ஆகியவற்றில் கூட மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதத்தை எட்ட வில்லை.

புதியக்கல்வி கொள்கை 2019 ன் கோட்பாடு இதற்கு பொருந்தாமல் போகிறது. இந்த அறிக்கையின் மற்றொரு தரவு பெரும்பாலான ஆண் குழந்தைகள் தனியார் மழலையர் பள்ளிகளிலும், பெரும்பாலான பெண் குழந்தைகள் அரசு அங்கன்வாடிகளிலும் சொற்பமான பேர் அரசு பள்ளிகளில் உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக கூறுகிறது. இந்த அறிக்கையில் உள்ள எதார்த்தமான உண்மைகளை சாக்கு போக்கு சொல்லி உதாசீனம் செய்யாமல் மற்றவர்கள் மீது பழி கூறி தப்பிக்க எண்ணாமல் முதலில் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வர வேண்டும். ஆரம்பக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து கல்வியை மேம்படுத்த செயலாற்ற வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...