×

ஊர்காவல்படையில் சேருவோர் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்

நாகை,பிப்.12: ஊர் காவல்படை பணியில் சேருவோர்கள் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி செல்வநாகரத்தினம் கூறினார். நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஊர் காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. தேர்வு குழுத்தலைவராக ஏடிஎஸ்பி முருகேசன் செயல்பட்டார். உறுப்பினர்களாக ஊர் காவல்படை மண்டல தளபதி ஆனந்த், ஆயுதப்படை பிரிவு டிஎஸ்பி திருவேங்கடம் ஆகியோர் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 78 ஆண்கள், 11 பெண்கள் பணியிடங்களுக்கு 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து உயரம், எடையளவு, மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்பி செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்து பேசியதாவது: ஊர் காவல் படை காவல்துறையின் ஒரு அங்கம்.

ஆனால் காவல்துறை போன்ற அரசு பணி இல்லை. ஊர் காவல் படை என்பது தன்னார்வ பணி ஆகும். ஊர் காவல் படை பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு மாதம் 10 டூட்டி வழங்கப்படும். அதற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். போக்குவரத்து சீர் செய்தல், விழா காலங்களில் கூட்ட நெரிசலை சரி செய்தல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது போலீசாருடன் இணைந்து பணியாற்றுதல் போன்ற பணிகள் ஊர் காவல் படையினருக்கு வழங்கப்படும். முழுக்க முழுக்க தன்னார்வ அடிப்படையிலேயே ஊர் காவல் படையினர் பணியாற்ற வேண்டும். ஜாதி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் காவல்துறை, மத்திய காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பணிகளில் சேரும் போது ஊர் காவல் படையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக அமையும் என்றார்.

Tags : Kayts ,
× RELATED ஊர்காவல் படையினர் ஊதியத்தை அரசு...