×

நகைக்கடை கொள்ளையன் சிக்கினான்

மார்த்தாண்டம், பிப். 12: மார்த்தாண்டத்தில் பரபரப்பு ஏற்படுத்திய, நகை கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடையில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையில்  கொள்ளையடித்த பணத்தில் சொத்து வாங்கி குவித்து இருப்பது  தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்தவர்  பொன் விஜய் (40). மார்த்தாண்டம் பஸ் நிலையம் எதிரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது  வீட்டுக்குள் கடந்த 27ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். வீட்டின்  பூஜை அறையில் இருந்த 56 பவுன் நகை, 1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து  இருக்கிறார். இதுதவிர அங்கு இருந்த நகைகடையின் சாவியையும் எடுத்துக் கொண்டு  வெளியேறி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள பொன்  விஜயின் நகை கடைக்குள் புகுந்து  அங்கிருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு மர்ம நபர் மாயமானார். இந்த கொள்ளை குறித்த தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.  தொடர்ந்து எஸ்பி  நாத், டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோரும் சம்பவ  இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து கொள்ளையனை பிடிக்க 4  தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து  வந்தனர். சிசிடிவி ேகமரா பதிவுகளை வைத்து சந்தேகப்படும்படியான நபர்களையும்  பிடித்து விசாரித்தனர். இது தவிர செல்போன் கால்களும் ஆய்வு செய்யப்பட்டன.  அதன் அடிப்படையில் குமரி, கேரள எல்லையோர பகுதியில் வைத்து ஒரு வாலிபரை  பிடித்து உள்ளனர். தற்போது அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை நடந்த விசாரணையில் இந்த  வாலிபர் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக  தெரியவந்து இருக்கிறது. ஆகவே அவரிடம் தொடர்ந்து விசாரணையை  விரைவுபடுத்தினர். அவர் கொள்ளையடித்த பணத்தில் சொத்துக்களை வாங்கி  குவித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலும் போலீசார் அவரிடம்  தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியில்  திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நகை கடை கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியிருப்பது மார்த்தாண்டம்  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : jeweler ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!