×

அரசு பஸ் டிக்கெட்டில் தக்கலை ‘தக்காளி’ ஆனது

நாகர்கோவில், பிப்.12: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்ட அரசு பஸ் பயண சீட்டு ஒன்றில் தக்கலை என்பதற்கு ‘தக்காளி’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவு செய்து டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் - களியக்காவிளை வழித்தடத்தில் உள்ள நகரம் தக்கலை. பத்மநாபபுரம் நகராட்சியின் கீழ் வருகிறது. கடந்த 7ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை போடி கிளை சார்பில்  மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு பயணித்த பயணி ஒருவருக்கு, ₹12க்கு பிஓஎஸ் இயந்திரத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. அந்த டிக்கெட்டில் மார்த்தாண்டம்- தக்காளி என்று குறிப்பிடப்பட்டது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

கூடவே ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என தக்காளி என்ற உச்சரிப்பு வரும் வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தக்கலை என்ற பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது தொடர்பாக எழுந்த குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் பத்மநாபபுரம் நகராட்சி நிர்வாகம் கடந்த 28.1.2010ம் ஆண்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பியது. அதில், தக்கலை என்ற பெயரை ஆங்கிலத்தில் ‘THUCKALAY’ என எழுதுவதால் வெளியூரை சேர்ந்தவர்கள் ‘துகளை’ என்றும் ‘துக்களை’ என்றும் உச்சரித்து தமிழில் எழுதி வருகின்றனர். எனவே தக்கலை என்பதை ஆங்கிலத்தில் ‘THAKKALAI’ என்று மாற்றம் செய்ய தமிழக அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயண சீட்டிலும் தக்கலை பெயர் இதே எழுத்துகளுடன் கூடிய வார்த்தையாக ஆங்கிலத்தில் இடம்பெற்றபோதிலும் கடைசியில் ஒரு ‘A’ விடுபட்டதால் தக்கலை, தமிழிலும், ஆங்கிலத்திலும் தக்காளி ஆனதாக கருதப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Takalai ,
× RELATED தக்கலை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாயம்