×

பூதப்பாண்டி, அழகியமண்டபம் அருகே காட்டுத்தீயால் கிராம மக்கள் அச்சம்: காற்றும் வேகமாக வீசியதால் மளமளவென பரவியது

பூதப்பாண்டி, பிப்.12:  பூதப்பாண்டி, அழகிய மண்டபம் அருகே மலையில் ஏற்பட்ட காட்டு தீயால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து நாசமானது. குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால், வன பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அழகியபாண்டிபுரம் மற்றும் பூதப்பாண்டி வன சரக பகுதிகளில் உள்ள மலைகளில்  தொடர்ச்சியாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இதனால் பல அரிய வகை மூலிகைகள்  தீயில் கருகி வருகின்றன. கோடை காலத்துக்கு முன்பே தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பூதப்பாண்டி அருகே உள்ள குறத்தியறை ஜெயந்திபாறை அவ்வையார் பொத்தை மலையில் திடீரென காட்டு தீ பரவியது. மரங்கள், செடிகள் காய்ந்து இருப்பதால் தீ ெகாளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம்  வந்தனர். ஆனால் மலை பகுதி என்பதால் தீயணைப்பு வாகனத்தை ெகாண்டு செல்ல முடியவில்லை. இதனால் தீயணைப்பு வாகனம் மலையடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கிளைகளை வெட்டி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வனத்துறையினரும் வந்தனர். பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு, தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. காற்றும் வேகமாக வீசியதால், தீ மளமள வென பரவியது. நேரம் செல்ல, செல்ல தீயின் தாக்கம் குறைந்தது. ஆனால் காற்று தொடர்ந்து வீசிய வண்ணம் உள்ளதால், மீண்டும் தீ பிடிக்கும் நிலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் குறத்தியறை, மடவிளாகம், ஜெயந்திபாறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மலையில் உண்டாகும் தீ மலையடிவாரத்தை நோக்கி வந்தால் இங்குள்ள வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

காட்டுத்தீ பிடித்துள்ள மலைப்பகுதி வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. எனவே வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இதே போல் தக்கலை அருகே உள்ள அழகியமண்டபத்தை அடுத்த பனங்காலவிளை காட்டு பகுதியில் நேற்று மதியம் திடீரென காட்டு தீ பற்றி எரிந்தது. தொடந்து அந்த காட்டு தீயை பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்ற போதும் தொடர்ந்து வீசிய காற்றால் மளமள என பற்றி எரிய தொடங்கிய தீ அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பரவியது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ரப்பர், தென்னை, வாழை பயிர்கள் கருகின. தொடர்ந்து எரியும் தீயை அணைக்க தக்கலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். வன பகுதிகளில தொடர்ந்து ஏற்பட்டு வரும் தீ விபத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வாழைகள் எரிந்து நாசம்
கன்னியாகுமரி :  கன்னியாகுமரி அருகே உள்ள புவியூரை சேர்ந்தவர் நாராயண பெருமாள். கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவருக்கு சொந்தமான, தோட்டம் கொட்டாரம் அருகே உள்ளது. இங்கு 1100 வாழை மரங்களும், 75 தென்னை மரங்களும் உள்ளன. நேற்று முன் தினம் இரவு இந்த நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின. வேண்டுமென்றே யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Poothappandi ,Akshaya Mandapam ,
× RELATED கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை