×

அருங்காட்சியகத்தில் கொடுமணல் புகைப்பட கண்காட்சி

ஈரோடு, பிப். 12:  ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கிடைத்த பழங்கால பொருட்கள், கல்வெட்டுகள், சோழர் கால நாணயங்கள், கை பீரங்கி, பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட விலை மதிப்பில்லாத பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள கொடுமணல் பகுதியில் அகழாய்வில் கிடைத்த அரிய வகை பொருட்களின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் கொடுமணல் பகுதி விளங்குகிறது.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுத்தறிவுள்ள மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பாசி மணிகள், வரைவு ஓடுகள், இரும்பு துண்டுகள், இரும்பு உருக்கு மண் குழாய்கள், தோல் பொருட்கள் உள்ளிட்டவைகளை அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டன. கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பொருட்களின் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. வரலாற்றுத்துறையில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்களும் இந்த கண்காட்சியை பார்த்து செல்லாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Cruelty Photo Exhibition ,Museum ,
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்