×

பவானியில் விதிமுறை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

பவானி, பிப். 12:  பவானியில் விதிமுறை மீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, சூரியம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: பவானி-அந்தியூர் நெடுஞ்சாலைக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது செயல்பட்டு வரும் கடைக்கு அருகில் மாணவ, மாணவியர் விடுதி உள்ளது. மேலும், புகழ்பெற்ற பண்டார அப்பிச்சி கோயில் உள்ளது. மதுக்கடையின் பின்பகுதியில் பவானி ஆறு ஓடுகிறது.
மேலும் டாஸ்மாக் கடை வழியாக செல்லும் சாலை, அபாயகரமான வளைவில் அமைந்துள்ளது.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும். மது வாங்க வருவோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, விதிகளுக்குப் புறம்பாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : Task Shop ,Bavaria ,
× RELATED நடுவானில் விமானத்தில் சண்டையிட்ட...