×

முருகன் கோயிலில் இன்று மகா தரிசனம்

சென்னிமலை, பிப். 12:  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 8ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மறுநாள் 9ம் தேதி மாலை 5.40 மணிக்கு தேர் நிலை சேர்க்கப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. நேற்று இரவு தெப்ப உற்சவம், பூத வாகனகாட்சி மற்றும் பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்று (12ம் தேதி) நடைபெறுகிறது. இதையட்டி சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இன்று காலை 9 மணிக்கு மேல் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணியசாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். பின்னர் இரவு 9 மணிக்கு சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. அப்போது 4 ராஜ வீதிகள் வழியாக சாமி வலம் வந்து நாளை (13ம் தேதி) அதிகாலை கைலாசநாதர் கோயிலுக்குள் அழைத்து செல்லப்படுவார். தொடர்ந்து நாளை (13ம் தேதி) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. மகா தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோடு, பெருந்துறை, சிவகிரி, காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Tags : Great Darshan ,Murugan Temple ,
× RELATED பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த...