×

சென்னிமலை அருகே போலி ஆவணங்கள் மூலம் மனைப்பிரிவு அனுமதி

பெருந்துறை, பிப். 12:   சென்னிமலை அருகே போலி ஆவணங்கள் மூலம் மனைப்பிரிவு அனுமதி பெற்றிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் கொம்மகோயில் பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் நகர் ஊரமைப்புத் துறையில் அனுமதி பெறப்பட்டதாக வந்த புகாரையடுத்து நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் உமாராணி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் கொம்மகோயில் பகுதியில் எமரால்டு சிட்டி என்ற பெயரில் 10 ஏக்கர் பரப்பளவில் 167 மனைப்பிரிவுகள் அனுமதி பெறப்பட்டு, சுற்றுச்சுவர், தார்சாலை மற்றும் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த மனை பிரிவிற்கு நடுவே நிலவியல் வண்டிப்பாதை உள்ளதாகவும், அதை மறைத்து போலியான ஆவணங்கள் மூலம் அனுமதி பெற்றதாகவும் பெருந்துறை வட்டாட்சியருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து பெருந்துறை தலைமை நில அளவையரை கொண்டு சம்பந்தப்பட்ட மனைப்பிரிவில் அளந்து பார்த்தபோது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலவியல் வண்டிப்பாதை மனையின் நடுவே செல்வது அளந்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கிராம ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நகர் ஊரமைப்பு துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் இந்த மனைப்பிரிவு இடத்தில் வீடுகட்டும் பணியும், மனை விற்பனை ஒப்பந்தமும் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 இது குறித்து திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் உமாராணியிடம் கேட்டபோது தவறான ஆவணங்கள் கொடுத்து அனுமதி பெறப்பட்டு இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து புகார் என் கவனத்திற்கு வந்துள்ளது. தற்போது விசாரணை நடந்து வருகிறது உடனடியாக சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு அனுமதியை நாங்கள் ரத்து செய்ய ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் இவ்வாறு கூறினார்.

Tags : spouse ,Chennimalai ,
× RELATED சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட்...