×

மாநில சோதனை சாவடி அருகே கேரளா கழிவுகள் கொட்டப்படும் அவலம்

பொள்ளாச்சி, பிப். 12: பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்களில், எல்லையோர சோதனை சாவடிகளை தாண்டி பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இதில், கேரள மாநில பகுதியில் இருந்து அவ்வப்போது, கோழிக்கழிவு, மருத்துவக்கழிவு, வாகன உதிரி பாக கழிவு உள்ளிட்ட கழிவு பொருட்கள் பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டுவந்து, கிராமங்களில் ஆங்காங்கே கொட்டப்படுது தொடர்கிறது. கடந்த சில வாரத்திற்கு முன்பு மீனாட்சிபுரம் அருகே ஒரு தோட்டத்தில்  பிளாஸ்டிக் கழிவு கொட்ட வந்த  லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர், இருப்பினும், இந்த செயல்பாடு இப்போதும் தொடர்ந்துள்ளது.

இதில், எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம்,  கோவிந்தாபுரம், நடுப்புணி, செமனாம்பதி ரோட்டோரம், மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகிறது. கேரள பகுதியிலிருந்து  கொண்டுவரப்படும் கழிவுகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டறிந்து  போலீசில் தகவல் தெரிவித்தாலும், இதுபோன்ற  சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பதில் அளிக்கின்றனர்.  ஆனால், அவர்களின் செயல்பாடு என்பது கண்துடைப்பாக உள்ளதால், இதற்கு அதிகாரிகளே உடந்தையாக செயல்படுகின்றார்களா என்ற சந்தேகம் அனைவரிடம் எழுந்துள்ளது. எனவே, கேரள பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகள், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்களில் ஆங்காங்கே கொட்டுவதை தடுக்கவும், அதை கொட்டுபவர்கள் யார் என கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kerala ,state checkpoint ,
× RELATED கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது:...