×

போலீஸ் எனக்கூறி நகை பறித்த 4 பேர் கைது

கோவை, பிப்.12:   கோவையில் போலீஸ் எனக்கூறி 82 பவுன் தங்க நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியை சேர்ந்தவர் சின்னையன் (55). தங்க நகை வியாபாரி. கடந்த மாதம் 18ம் தேதி சின்னையன் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார். பேக்கில் அவர் சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 82 பவுன் தங்க நகை வைத்திருந்தார். உக்கடம் பஸ் ஸ்டாண்டில்  இறங்கிய அவர் பேக்குடன் பெரியகடை வீதியில் ஒரு கோயில் முன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மப்டி போலீஸ் எனக்கூறி 4 பேர் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது சின்னையன், தன்னிடம் உள்ள தங்க நகைகளை செல்வபுரத்தில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தேன் எனக்கூறினார். இதை கேட்ட அவர்கள், முறையான ஆவணத்தில் தங்கம் வாங்கி நகை செய்தீர்களா?, இதற்கான ஆவணங்கள், பில் இருக்கிறதா? என கேட்டனர்.

அதற்கு சின்னையன் முறையான ரசீது இருக்கிறது என காட்டினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பேக்கில் இருந்த நகையை வாங்கி பார்த்து சோதனையிட்டு திருப்பி கொடுத்தனர். சிறிது தூரம் சென்ற சின்னையன், அவர்களின் பேச்சு நடவடிக்கையில் சந்தேகமடைந்து பேக்கை திறந்து பார்த்தார் அப்போது பேக்கில் நகை இல்லாமல் இருப்பது தெரியவந்தது. நகைக்கு பதிலாக சில கற்களை பேப்பரில் சுற்றி பேக்கில் வைத்து கொடுத்து ஏமாற்றி அவர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி போலீசாக நடித்து நகை அபஸே் செய்தவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் அந்த கும்பலை சென்னை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் போபாலை சேர்ந்த அபு ஹைதர் அலி (45), மெகந்தி அலி (44), சாதிக் அலி (35), கர்நாடகா மாநிலம் குல்பர்கா பகுதியை சேர்ந்த அசன் அலி (32) என தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான கும்பல்  சென்னை, மதுரையில் போலீஸ் எனக்கூறி நடித்து நகை, பணம் பறித்தது தெரியவந்தது. இந்த கும்பலிடம் இருந்து நகை, பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

Tags : jewelery ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...