×

மாவட்டத்தில் 13 குழுக்கள் தேர்வு மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த திட்டம்

கோவை, பிப். 12: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் 13 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் கடன் உதவிகள் பெற்றுத் தரப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் வகையில் (பிளிப்கார்ட்) தனியார் ஆன்லைன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.  தமிழகத்தில் இத்திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், ஆன்லைனில் சந்தைப்படுத்தும் திட்டத்தில் முதல்கட்டமாக துணிவகை பொருள்களை தயாரிக்கும் 13 மகளிர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. துணி வகைகள், உணவுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சந்தைப்படுத்தும் திட்டத்தில் முதல்கட்டமாக துணி வகைகள் மட்டுமே விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை ஜவுளி கிளஸ்டராக அறிவித்து துணி வகைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுக்களை மட்டும் தேர்வு செய்துள்ளனர். மகளிர் குழுக்கள் தயாரிக்கும் அனைத்து வகைப் பொருள்களையும் ஆன்லைனில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும். வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது’’ என்றார்.

Tags : groups ,district ,
× RELATED தமிழகத்திற்கு 190 துணை ராணுவப் படை குழுக்கள் வருகை!!