×

கடலூரில் கடல் சீற்றம்; திடீர் மழை

கடலூர், பிப். 12: கடலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில்  திடீர் மழை விட்டு விட்டு பெய்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம்  முடிவடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் சில நாட்களாக வெகுவாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே  கடலூர் மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
திடீர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட விவசாய விளைபொருட்கள் சாலை மற்றும் களங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நனைந்ததால் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழையின் தாக்கம் இன்றும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பருவக் காற்றின் திசை மாற்றம் நிகழ்வதால் இதுபோன்று மேகங்கள் கடந்து செல்லும் நிலையில் மழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது எனவும் வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பருவக்காற்றின் திசை மாற்றம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகியுள்ளது. கடலூர் கடல்பகுதியில் சுமார் 1.1 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் இருக்கும் எனவும் சீற்றம் தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

திடீர் மழையால் கடலூர் நகரின் பல்வேறு சாலை மற்றும் தெரு பகுதி மின் புதைவட திட்ட பணிக்காக  தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!