×

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நெல்லை குறைவாக கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அவதி

ஸ்ரீமுஷ்ணம், பிப். 12: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் குறைவாக நெல்லை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் லாரி வராததால் நெல் மூட்டைகளை கொண்டு செல்லாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தற்போது சம்பா நெல் அறுவடை பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதில் ஸ்ரீமுஷ்ணம், ஆனந்தகுடி, குணமங்களம், ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, சோழத்தரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நெல்கொள் முதல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

சன்னரக நெல் கிலோ 19 ரூபாய் ஐந்து பைசா, மோட்டா ரகம் கிலோ 18 ரூபாய் 62 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களில் தினசரி 800 மூட்டைகள் வரை வாங்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஒரு நாளுக்கு 4, 5 விவசாயிகளிடமிருந்து குறைவாகவே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை லாரிகள் மூலம் உடனுக்குடன் ஏற்றி செல்லப்படுவதில்லை. இதனால் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திதலேயே அடுக்கி வைக்கப்பட்டு தேக்கம் அடைந்துள்ளது. மேலும் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்ய 15 நாட்கள் வரை காத்து கிடக்கும் நிலை உள்ளது.

இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். எனவே அரசு விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் தினசரி ஏற்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்