×

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவிலான வேகத்தடையால் தினமும் விபத்து

உளுந்தூர்பேட்டை,  பிப்.12: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  சேலம் ரோடு ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் திருச்சியில் இருந்து வரும்  வாகனங்கள் அனைத்தும் வேகமாக வந்து திரும்பும் போது ஏற்படும் விபத்துகளை  தடுக்க நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. இந்த  வேகத்தடைகள் 4 இடங்களில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டதால் தற்போது அதிக விபத்துகள் நடப்பதற்கு இந்த வேகத்தடைகளே காரணமாக உள்ளது. மிக அதிகமான உயரத்தில்  அடுத்தடுத்து தொடர்ந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் திருச்சி  மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வேகத்தடையில் மெதுவாக கடக்கும்  போது வேகத்தடையில் சிக்கி வாகனங்கள் நின்று விடுகிறது.

இதனால் பின்னால்  வரும் வாகனங்கள் வேகத்தடையில் நிற்கும் வாகனத்தின் பின் பகுதியில் மோதி  விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் லாரி, மினி லாரி, டெம்போ  உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமின்றி பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களும்  வேகத்தடைகளை கடக்க கடும் சிரமப்பட்டு வருகின்றன. மேலும் நீண்ட தூரத்தில்  இருந்து வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் அதிகளவில் வேகத்தடைகள் இருப்பது  தெரியாமல் வந்து திடீரென பிரேக் பிடிக்கும் போது பின்னால் வரும் வாகனங்கள்  மோதி தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை  தடுப்பதற்காக போடப்பட்ட வேகத்தடைகள் உளுந்தூர்பேட்டை சேலம் ரோடு ரவுண்டானா அருகில் தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தி வரும் வேகத்தடைகளாக மாறியுள்ளன.

இது  குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையின்  உயரத்தை குறைத்து இரண்டு இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என  வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Accident ,highway ,Tiruchi ,Ulundurpet ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...