×

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டெங்கு, கொரோனா போன்ற வைரஸ்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளதா, அதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கொடுமையான வைரசான கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய தலைமை செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை பார்த்த நீதிபதிகள், இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள் என்று மாநகராட்சி வக்கீலிடம் கேட்டனர்.

அதற்கு, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 2075 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தினமும் 70 முதல் 80 வீடுகள் என்ற கணக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்திலிருந்து முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சியின் திட்டமிடல் சரியாக உள்ளது. அந்த திட்டமிடல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேலும் டெங்கு, கொரோனா போன்ற நோய் பரப்பும் வைரஸ்களை தடுப்பதற்கு தற்போதுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக உள்ளதா என்பது குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...