×

புதுவை தமிழ்ச்சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும்

புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரி தமிழ்ச்சங்க பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் 1967ல் புதுவை தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. திருமுடி சேதுராமன், தமிழறிஞர்கள், தமிழ்மாமணி, மன்னர் மன்னர், அருணகிரி, சிவகண்ணப்பா உள்ளிட்ட அறிஞர்களால் தமிழ் வளர்ச்சி, தமிழ் பாதுகாப்பு போன்ற சுயநலம் இல்லாத இலக்கிய பணிகள் செய்ய ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். சங்க விதிகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். கடந்த 2013 முதல் 2019 வரை சிறப்பு பொதுக்குழு என 2 முறை மட்டுமே கூட்டப்பட்டுள்ளது. பட்டய கணக்காளரால் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை, அதன் பொதுக்குழு அமைப்புடன் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு அனுப்புவதில்லை.

நடுவண் அரசின் சங்கங்கள் பதிவாளர் அலுவலகத்தில் 2013 முதல் 2019 வரை தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சங்கத்தேர்தல் விதிமுறைகளை மீறி எவ்வித உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி கையொப்பமிடாமல் முத்திரையின்றி வாழ்நாள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதன் நிர்வாகிகள் அங்கு வந்து செல்ல எவ்வித உரிமையும் இல்லை. தேர்தல் முறையற்று நடக்குமோ என வாழ்நாள் உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சுகின்றனர். எனவே, புதுச்சேரி அரசு, இச்சங்கத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு சங்க தேர்தலை முறையாக தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...