×

2 ஆண்டாக சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்த தாய்லாந்து பெண்ணுக்கு உடனடி பாஸ்போர்ட்: சட்டப்பணிகள் ஆணை குழு உதவி

சென்னை: பாஸ்போர்ட் இல்லாமல் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் 2 ஆண்டுகளாக தவித்து வந்த தாய்லாந்து நாட்டு பெண்ணுக்கு சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி செய்துள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பட்சாரூட் புன்சாகோன். இவர், கடந்த 2008ம் ஆண்டு மலேசியாவில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதன்படி, சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர், சிறை தண்டனையை முடித்து விட்டு, கடந்த 2018ம் ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தார். ஆனால், அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்திலேயே இருந்ததால், வெளியே வந்த பின்னர், தாய்நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தியிடம் இதுகுறித்து புகார் அளித்து, பல வருடங்களாக சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே எனக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதி பெற்று கொடுக்க வேண்டும் என பட்சாரூட் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தை நாடி, பெண்ணின் பாஸ்போர்ட்டை நேற்று பெற்றுக் கொடுத்தார். இதனைதொடர்ந்து, தாய்லாந்து நாட்டு தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பெண்ணை சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்காக விசா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் பாஸ்போர்ட் பெறமுடியாமல் தவித்த பெண், சில நாட்களில் முடித்து கொடுத்த நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : home ,Thai ,Legal Aid Commission ,
× RELATED மதுரையில் மது அருந்தியதை...