×

தொழிலதிபர் வீட்டில் 72 சவரன், ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் வேலைக்கார பெண் உட்பட 4 பேர் திருச்செந்தூரில் சுற்றிவளைத்து கைது: கணவன் உதவியுடன் கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: சென்னை தொழிலதிபர் வீட்டில் 72 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வேலைக்கார பெண்ணை தனிப்படை போலீசார் திருச்செந்தூரில் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காசாமேஜர் சாலை சுலைமான் சக்ரியா அவென்யூவை சேர்ந்த தொழிலதிபர் கல்யாணகுமார் (40). இவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது வீட்டில் பெற்றோர் மட்டும் உள்ளனர். இங்கு, கடந்த 5 ஆண்டுகளாக சேத்துப்பட்டு எம்.எஸ். நகர் முதல் தெருவை சேர்ந்த லோகநாயகி (48) என்பவர் சமையல் வேலை செய்து வந்தார். லோகநாயகியின் உறவினரான ஷாலனி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த மாதம் 24ம் தேதி லோகநாயகி மற்றும் ஷாலனி ஆகியோர் திடீரென வீட்டு வேலைக்கு வரவில்லை. இருவரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த கல்யாணகுமாரின் பெற்றோர் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை சரிபார்த்துள்ளனர். அப்போது, 72 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கல்யாணகுமாரிடம் அவரது பெற்றோர் தெரிவித்தனர். அதன்படி கல்யாணகுமார் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் வேலை செய்து வந்த ஷாலினி அவரது கணவர் அமரேசன் (எ) அமர் (27) உதவியுடன் கல்யாணகுமார் வீட்டின் பீரோ சாவியை எடுத்து போலியாக சாவி தயாரித்து அதன் மூலம் சிறுக சிறுக தனது சித்தி லோகநாயகி மூலம் 72 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஷாலினியை கைது செய்தனர். ஷாலினி போலீசாரிடம் சிக்கிக்கொண்ட செய்தி அறிந்ததும் லோகநாயகி (48), ஷாலினியின் கணவர் அமரேசன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த பிரவீனா (எ) எஸ்தர் (23), பீரவீன் (28) ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க எழும்பூர் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை நடத்தியபோது லோகநாயகி திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்செந்தூர் சென்று லோகநாயகி உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 72 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : persons ,maid ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது