×

பூண்டி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் கலைஞர் உருவ படம் வைக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

திருவள்ளூர், பிப். 12: பூண்டி ஒன்றிய குழு கூட்டரங்கில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருஉருவ படத்தை வைக்க, திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற முதல் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பூண்டி ஒன்றியத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அதிமுவை சேர்ந்த வெங்கடரமணா ஒன்றியக் குழு தலைவராகவும், திமுவை சேர்ந்த மகாலட்சுமிமோதிலால் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பூண்டி ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வெங்கடரமணா தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கும்மிடிபூண்டி எம்எல்ஏ விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகாலட்சுமிமோதிலால் பேசினார்.
80 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி திருஉருவ படத்தை மன்ற அரங்கத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு 8 திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தும், அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் முதல் அமைச்சர் உருவப்படத்தை எப்படி வைக்க முடியம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கேள்ளி கேட்டனர்.
இதற்கு மகாலட்சுமிமோதிலால், மன்ற கூட்டத்தில் இருந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் இருந்ததை சுட்டி காட்டினார்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒன்றிய குழு தலைவர் வெங்கடரமணா பேசுகையில், ‘’இது குறித்து சட்டத்தில் குறிபிட்ட அம்சங்கள் ஆராய்ந்த பின்னர் முடிவு எடுக்கலாம்’ என்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் சுதாகர், சிவசங்கரி, ஒன்றிய கவுன்சிலர்கள் பேபி, பிரசாந்தி, குமார், தேன்மொழி, மணி, பாலாஜி, சண்முகம், யசோதா, ஞானமுத்து, வெங்கடேசன், விஜி, பிரபாவதி, சுபாஷினி, சுலோசனா, ரெஜிலா, மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Bundi Union Committee ,DMK ,meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி