×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு: செங்கை கலெக்டர் எச்சரிக்கை

திருப்போரூர், பிப்.12: திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. இதற்காக நான்கு மாடவீதிகள், பழைய மாமல்லபுரம் சாலை, வணிகர் தெரு, சான்றோர் தெரு, திருவஞ்சாவடி தெரு ஆகிய தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்படுகின்றன. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், மார்ச் 5ம் தேதி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி  நான்கு மாட வீதிகளிலும் பிரமாண்ட தேரோட்டம் நடைபெற உள்ளது. தற்போது நடந்து வரும் பாதாள சாக்கடை பள்ளங்களால் தேரோட்டம் பாதிக்கப்படக்கூடாது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நான்கு மாடவீதிகளில் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளிலும்  நேற்றுஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலை உதவிப்பொறியாளர் சுவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோரிடம் திருவிழா எத்தனை நாள் நடைபெறும், தேரோட்டத்துக்கு எவ்வளவு பக்தர்கள் வருவார்கள், அதற்குள் தோண்டிய பள்ளங்கள் மூடப்படுமா என கேட்டார்.
பின்னர், வரும் 21ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். 15ம் தேதி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார். மேலும், சாலைபணிகளை அதிகாரிகள் தரமாக மேற்கொள்ள வேண்டும், தேரோட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளே பொறுப்பு என கலெக்டர் எச்சரிக்கை செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஆர்டிஓ செல்வம், வட்டாட்சியர் செந்தில்குமார், திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா ஆகியோர் உடன் இருந்தனர். மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது காஞ்சிபுரம் கலெக்டரிடம் இந்த பேரூராட்சி பலமுறை நற்சான்றுகள் பெற்றுள்ளது. இந்நிலையில், தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், பேரூராட்சியில் நடைபெறும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு செயல்படுத்தப்படும் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்களிடம் இருந்து பெறும் முறைகள், அவற்றை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெறக்கூடிய இடத்துக்கு கொண்டு வந்து அதனை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கி விற்பனை செய்வது, மக்காத குப்பைகளை தூளாக்கி வேறு பல பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடித்தோட்டம், காய்கறி தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பேரூராட்சியை பார்வையிட்டார். அப்போது, மதுராந்தகம் வட்டாட்சியர் வேல்முருகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சாந்தகுமார் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Thirupporeur Kandaswamy Temple Brahmotsava ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு