×

வேலைக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் காஞ்சிபுரம் எஸ்பி: சிஐடியு கண்டனம்

காஞ்சிபுரம், பிப்.12: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட சிஐடிய தலைவர் கண்ணன், செயலாளர் முத்துக்குமார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தால் எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என லட்சக்கணக்கான ஆண், பெண்கள் வேலை தேடி இடம் பெயர்ந்து செல்கின்றனர். அதுபோல் இடம்பெயர்ந்து பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போல் அடையாளப்படுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு காஞ்சிபுரம் எஸ்பி அறிவுறுத்தியதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. இந்திய குடிமகன் வேலைக்காக நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று பணிபுரியவும் அரசியலமைப்பு சட்டம் உரிமை அளிக்கிறது.  வட இந்திய தொழிலாளர் என்ற முறையில் அடையாளப்படுத்துவதும், அவர்களை சமூகவிரோத செயல்களோடு ஈடுபடுத்தி பேட்டி அளிப்பது எஸ்பி போன்ற அதிகாரிகளுக்கு அழகல்ல.

பிறந்த மண்ணையும் சொந்த உறவுகளையும் துறந்து வேறு பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதி தொழிற்சாலை ஆய்வாளர்களும், இதர முறைசாரா தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களும் அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும், பராமரிக்க தொழிலாளர் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. இந்தவேளையில், இடம் பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகிகள், போலீசார் போல கண்காணிக்க எஸ்பி அறிவுறுத்துவது இடம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களை, இடம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தின்படி பராமரிக்கவும், அவர்களுக்கான பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, தங்குமிடம் உள்பட அனைத்து அம்சங்களையும் உறுதி செய்ய தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram SP ,migrant workers ,CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு