×

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது: பைக், செல்போன்கள் பறிமுதல்

பல்லாவரம், பிப்.12: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து மர்மநபர்கள், கஞ்சா விற்பனை செய்வதாக பல்லாவரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார், திரிசூலம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திரிசூலம், சாரா நகர் பிரதான சாலையில் ஒரு பைக்கில் சந்தேகப்படும்படி 4 பேர் சுற்றி திரிந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது, 149 பாக்கெட்டுகளில் சுமார் 750 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், 4 பேரையும், காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அதில், ஜமீன் பல்லாவரம், மலைரோடு பகுதியை சேர்ந்த கிஷோர் (21), பழைய பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெரு ஞானசேகர் (எ) நாகராஜ் (22), பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகர், எம்ஜிஆர் தெரு விஜயன் (20), அருள் (20) என தெரிந்தது. மேலும் விசாரணையில், 4 பேரும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அதனை தனித்தனி பாக்கெட்டுகளாக பிரித்து, பல்லாவரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். கஞ்சா விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் மது, மாது என்று உல்லாசமாக இருந்தனர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். பின்னர் அவர்களை, தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...