×

தமிழின் மீதான ஆக்கிரமிப்பை அகற்றியவர் பாவாணர் தொல்.திருமாவளவன் பேச்சு

ராஜபாளையம், பிப். 11: தமிழ் மொழி மீதான வடமொழி, சமஸ்கிருதம் மொழி ஆக்கிரமிப்புகளை அகற்றியதல் முதன்மையானவர் தேவநேயப் பாவாணர் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் அருகே முரம்பில் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு, உலக தமிழ்க் கழகத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. பாவலர் இளங்குமரன் தலைமை வகித்தார். உலக தமிழ்க் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் தமிழியலன் முன்னிலை வகித்தார். உலக தமிழ்க் கழக மாவட்ட தலைவர் இளங்கண்ணன், செயலாளர் வெற்றிக்குமரன், கணக்காய்வாளர் அரசகுரு, அறங்காவலர்கள் முத்தரசன், எழில்நாயகன், ஒருங்கிணைப்பாளர் நிலவழகன், பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் பேசினர். இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆண்டு விழா கூட்ட அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழும் வடமொழியும், தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து மணிபிரவாளம் என்ற புதிய மொழி உருவாகி, தமிழ் மறந்து போகும் காலம் வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தமிழ் மொழியை பாதுகாத்ததில் முதன்மையானவர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். இவரின் படைப்புகள் அனைத்தையும் நாம் படித்து முடித்தால் சாதி உணர்வு, மத உணர்வு தானாக உதிர்ந்து விடும். பாவாணரை படித்தால் சாதி, மதவெறி மாறும். உலகளாவிய பார்வை கிடைக்கும். சகோதரத்துவம் மேலோங்கும். எந்த மொழியையும் எந்த இனத்தையும் இழிவுபடுத்தக் கூடாது. நம்முடைய பெருமை, நம்முடைய பாரம்பரியத்தை பாதுகாப்பது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழர்களாக ஒருங்கிணைய வேண்டும் என போராடும்போது சாதி வாதிகளாக ஒருங்கிணைவோம் என்கிற அரசியல் இங்கே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் தமிழிய உணர்வு மேலோங்கிறதோ, அப்போதெல்லாம் சாதி உணர்வும் மத உணர்வும் கூர்தீட்டப்படுகிறது.

இதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு பாவாணரியம் தேவைப்படுகிறது. மொழி உணர்வும் இன உணர்வும் ஒரு இனத்தின் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காக தேவை. ஆனால் அது சமத்துவத்தை நோக்கியதாக இருக்கவேண்டும். அது இன்னொரு இனத்தை ஆதிக்கம் செய்யக்கூடியதாக மாறினால் நோக்கம் அடிபட்டுப் போகும். நாம் சமத்துவத்தை நோக்கி மொழி உணர்வையும் இன உணர்வையும் வளர்ப்போம். அதுதான் பாவாணருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Bhavana Thol.Thirumavalavan ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...