×

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பில்லாமல் தவிக்கும் மாணவிகள்

தேனி, பிப். 11: தேனி அருகே வீரபாண்டியில் செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், ரோமியோக்களின் தொல்லைகளாலும் சிரமப்பட்டு வருகின்றனர். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பயிற்சி கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் விடுதியிலேயே தங்குகின்றனர். இங்கு துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் துப்புரவு பணிகளை மாணவிகளே மேற்கொள்ள வேண்டி உள்ளது. சமையல் பாத்திரங்களை கூட மாணவிகள் சுத்தம் செய்யும் நிலை காணப்படுகிறது. தவிர பாதுகாப்பு இன்மை தான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்னை. இங்கு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இரவு வாட்ச்மேன் கிடையாது. சுற்றுச்சுவரும் உயரம் குறைவாக உள்ளது. இதனால் இரவில் ரோமியோக்களும், குடிமகன்களும், சட்டவிரோத செயல் செய்பவர்களும் மருத்துவமனைக்குள் புகுந்து விடுகின்றனர்.

ஒரு சில நேரங்களில் விடுதி பாத்ரூம் வரை சென்று விடுகின்றனர். இதனால் மாணவிகள் அச்சப்பட்டு அலறி, மருத்துவமனை படுக்கையில் உள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வந்து இந்த குடிமகன்களையும், சட்டவிரோத கும்பலையும் துரத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து மருத்துவ துணை இயக்குனர் கவனத்திற்கு சென்றதால் அவர் நேரடியாக விசிட் செய்து, மாணவிகளின் பிரச்னைகளை எப்படி தீர்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கி உள்ளார். இருப்பினும் சுற்றுச்சுவரை உயர்த்த மாவட்ட கலெக்டர் தான் நிதி வழங்க வேண்டும். இரவு வாட்ச்மேன் நியமிக்க கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையை நேரடியாக கவனிக்க வேண்டும் என பொதுமக்களே வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Veerapandi Primary Health Center ,
× RELATED வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்...