×

நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, பிப். 11:  சிவகங்கை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. சுமார் 3.3 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அறுவடையான நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட  நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொள்முதல் நிலையங்கள் பகுதி, பகுதியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடம் 40கிகி கொண்ட ஒரு மூடை நெல் ரூ.760க்கு பெறப்படுகிறது. நெல்லை சுத்தம் செய்வதற்கென ஒரு மூட்டைக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் வெவ்வேறு தொகை வசூல் செய்கின்றனர். சுத்தம் செய்வதற்கென அரசு சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டும் சுத்தம் செய்ய கூடுதலாக பணம் வசூல் செய்கின்றனர். நெல் மூட்டையை எடை வைக்கவும் வசூல் செய்யப்படுகிறது. பல இடங்களில் சுத்தம் செய்யப்படும் இயந்திரங்கள் இல்லை. இதனால் தனியார் மூலம் சுத்தம் செய்யப்பட்டு பணம் வசூல் செய்யப்படுகிறது. பல நெல் கொள்முதல் நிலையங்களில் சுத்தம் செய்ய இயந்திரம் இல்லாமை, ஆள் பற்றாக்குறை, வியாபாரிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நெல் சுத்தம் செய்யப்படாமலும், கொள்முதல் செய்யப்படாமலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து வைத்து விட்டு பல நாட்களாக காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் உள்ளன. இங்கு வந்து நெல்லை வைத்துவிட்டு பல நாட்கள் வெயில் மற்றும் பனியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பல நாட்கள் வெயிலில் இருப்பதால் நெல் தரமிழந்து போகும். மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படும். கொண்டு வந்த நெல்லை மீண்டும் எடுத்து செல்லவும் பணம் செலவு செய்ய வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் இங்கேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சுத்தம் செய்ய, எடை போட போதிய இயந்திரம் மற்றும், ஆட்கள் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். போதிய ஊழியர்கள், இயந்திரங்கள் ஏற்பாடு செய்து விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்’ என்றனர்.

Tags : paddy purchasing centers ,
× RELATED விவசாயிகளிடம் வாங்காமல்...