×

விராலிபட்டியில் முதல் ஊராட்சி கூட்டம் வைகை நீரை கொண்டு வர கோரிக்கை

வத்தலக்குண்டு, பிப். 11: வத்தலக்குண்டு அருகே விராலிபட்டி ஊராட்சியில் நடந்த முதல் கூட்டத்தில் வைகை நீரை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விராலிப்பட்டி ஊராட்சியில் முதல் கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் கலந்து கொண்டார்.

ஊராட்சி செயலாளர் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர் சவுந்தரபாண்டியன் பேசுகையில், ‘வைகை அணையிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விராலிப்பட்டி அருகேயுள்ள பண்ணைப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் செல்கிறது. அதேபோல் அங்கிருந்து சிறிய குழாய்கள் மூலம் தண்ணீரை விராலிப்பட்டிக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்’ என்றார்.
அதற்கு தலைவர், இதற்கான நடவடிக்கைகள் முறையே எடுக்கப்படும் என்றார். இதில் வார்டு உறுப்பினர்கள் தங்கையா, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர் ஜெயபால் நன்றி கூறினார்.

Tags : Vaigai ,panchayat meeting ,Viralypatti ,
× RELATED சித்திரை திருவிழாவின் முக்கிய...