×

கெங்கவல்லி நெடுஞ்சாலையில் மரக்கிளைகள் மீது உரசி செல்லும் மின்கம்பிகள்

கெங்கவல்லி, பிப்.11: கெங்கவல்லி நெடுஞ்சாலையில் மரக்கிளைகள் மீது மின் ஒயர்கள் உரசுவதால் இணைப்பு துண்டித்து மின் தடை ஏற்படுகிறது. இதனால் மரக்கிளைகளை வெட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர்-கெங்கவல்லி நெடுஞ்சாலையோரங்களில் வேப்பம், புளியமரங்கள் வளர்ந்துள்ளது. இங்கு கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 12,13,14 ஆகிய வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளுக்கு செல்லும் மின்சார ஒயர்கள் மரக்கிளைகள் மீது சென்று கொண்டிருக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டு மின்சார வாரியம் மாதந்தோறும் மின் வினியோகம் நிறுத்தி, இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மரக்கிளைகளை தொடர்ந்து வெட்டாமல் மரக் கிளைகள் பரந்து மின்சார ஒயர்கள் நடுப்பகுதிக்கு சென்று விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் பலமாக காற்று வீசினாலும் அல்லது மழை பெய்தால் மின் ஒயர்கள் உரசி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கிராமங்களில் மின்தடை ஏற்படுகிறது. தற்போது மாணவ,மாணவிகளுக்கு தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, மரக்கிளைகளை வெட்ட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, இது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்கள் என்பதால் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். விரைவில் மரக்கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா