×

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள 7 பறக்கும் ரயில் நிலையங்களில் மாஜி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு : முதற்கட்டமாக 15 பேர் நியமனம்

சென்னை: கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள 7 பறக்கும் ரயில் நிலையங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்ைட, மயிலாப்பூர், திருவான்மியூர், பசுமை வழிச்சாலை, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி விரைந்து செல்ல முடியும் என்பதாலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படுவதால் தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு, திருட்டு போன்ற சம்வங்கள் அதிகம் நடைபெறுவதாக ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

 இதையடுத்து ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசாரிடம் ஆள்பற்றாக்குறையாக இருப்பதால் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தனியார் ஊழியர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தனர். அதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து ரயில்வே துறையினருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் 55 ராணுவ வீரர்கள், தனியார் பாதுகாப்பு ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக கடற்கரை முதல் வேளச்சேரி பறக்கும் ரயில்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு வசதிக்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 15க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், இந்திராநகர், கிரீன்வேஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய 7 ரயில் நிலையங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என இரண்டு ஷிப்ட்டுகள் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பறக்கும் ரயில் நிலையங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Security forces ,railway stations ,Velachery ,
× RELATED காஷ்மீரின் குல்காம் பகுதியில்...