×

தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்து வந்த 30 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை, பிப்.11: தேன்கனிக்கோட்டை அருகே அட்டகாசம் செய்து வரும் 30 யானைகளை, நொகனூர் காட்டுக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 3 மாதங்களாக தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம் ஆகிய பகுதிகளில் பல பிரிவுகளாக பிரிந்து ராகி, தக்காளி, நெல், வாழை, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்துள்ள 30 யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட மாவட்ட வன அலுவலர் தீபக்  பில்கி உத்தரவிட்டார்.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சீதாராமன் (பொறுப்பு)  தலைமையில் வனவர்கள் கதிரவன், ஈஸ்வரன், மோசிகிரன் ஆகியோர் கொண்ட 30 பேர் கொண்ட குழுவினர், மூன்று பிரிவுகளாக பிரித்து ஆலல்லி, மரகட்டா, நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 30 யானைகளை, நேற்று ஒருங்கிணைந்து தாவரக்கரை காட்டிற்கு விரட்டினர்.  ஆலல்லி காட்டிலிருந்து விரட்டப்பட்டபோது, 10 யானைகள் மரகட்டா அருகே அஞ்செட்டி சாலையை கடந்து நொகனூர் காட்டிற்கு சென்றன. அப்போது சாலையின் இருபுறமும், வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி யானைகளை சாலையை கடக்கச் செய்தனர். பின்னர், அங்கிருந்து தாவரக்கரை காட்டிற்கு யானைகள் விரட்டப்பட்டன. இன்னும் ஓரிரு நாட்களில், இந்த யானைகளை ஜவளகிரி வழியாக கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Thenkanikottai ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது