×

ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்டிஓவிடம் மாணவர்கள் மனு

ஓசூர், பிப்.11: ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது: ஓசூர் கலைக்கல்லூரியில் 1500 மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம். கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே, கூடுதல் கழிப்பிடங்களை கட்டி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் சிற்றுண்டி வசதி ஏற்படுத்தி, குறைந்த விலையில் தரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி உதவித்தொகையை உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். நூலக வசதி, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும். மாணவிகளின் நலன் கருதி நாப்கின் எரிக்கும் இயந்திர வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் குப்பைகளை எரிக்க குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : facilities ,RTO ,Hosur Government Art Gallery ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...