×

நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை நாகநதி மேம்பாலம் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

வேலூர், பிப்.11: வேலூர் அருகே நாகநதி மேம்பாலம் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அங்கு ஆய்வு ேமற்கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறினார். வேலூர் அருகே உள்ள நாகநதியை கடந்து பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலத்தில் வெள்ளம் ஓடும்போது, சுமார் 7 கி.மீ சுற்றிச் சென்று மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே நாகநதியில் மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நபார்டு நிதி ₹3 கோடியில், மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை இதுவரை முடிக்காமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், ‘பாலம் அருகே ஒரு மின்கம்பம் இடையூறாக உள்ளது. இதை வேறு இடத்தில் அமைக்க விண்ணப்பித்துள்ளோம். மின்கம்பத்தை மாற்றி அமைத்தவுடன் பணிகள் மேற்கொள்ள உள்ளோம்’ என்றனர். எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், `மேம்பால பணிகள் தொடங்கியபோதே, என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதை பார்த்து சரி செய்திருக்க வேண்டும். முழுமையாக திட்டமிடாமல் இருந்து உள்ளீர்கள். மழைக்காலங்களில் பாலத்தின் உயரத்தை தாண்டியும் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பாலத்துக்கு அடியில் வடிகால் கட்டமைப்பு அமைக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் பாலத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். காட்டாற்று வெள்ளத்தின்போது, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்புள்ளது. எனவே விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில், பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு சுவர்களை அமைக்க வேண்டும்.

இதற்காக ₹20 முதல் ₹30 லட்சம் வரை கூடுதல் செலவை முன்கூட்டியே திட்ட மதிப்பீட்டில் சேர்த்து இருக்க வேண்டும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள். உடனடியாக அதற்கான அறிக்கையை தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்'''' என்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், `நாகநதி ஆற்றோரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்ட போர்வெல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீருக்கு கஷ்டப்படுகிறோம். எனவே போர்வெல்லை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'''' என்றனர். உடனடியாக அங்கிருந்த பிடிஓ ரகுவை அழைத்து, `உடனடியாக போர்வெல்லை சீரமைக்க நடவடிக்கை எடுங்கள். உங்களிடம் நிதி இல்லாவிட்டால், என்னுடைய நிதியிலிருந்து போர்வெல்லை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்'''' என்றார்.

தொடர்ந்து எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், ‘நான் எம்எல்ஏவாக தேர்வானபோது பொதுமக்கள் 2 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். அதில் ஒன்று பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய இடங்களில் சாலை வசதி செய்து தர வேண்டும். அடுத்தபடியாக நாகநதியில் மேம்பாலம் கட்ட வேண்டும்’ என்றனர். இந்த கோரிக்கைகளை சட்டமன்றத்தில் 4 முறைக்கு மேல் வலியுறுத்தினேன். கலெக்டரிடமும் முறையிட்டேன். அப்போது, நாகநதியில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பது குறித்து பொதுப்பணித்துறை சான்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நேரடியாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்று, சான்றிதழ் பெற்று தந்தேன். தற்போது, இந்த திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. மேம்பாலத்தை பொதுமக்கள் 50 ஆண்டுகாலம் பயன்படுத்தும் வகையில், தரமானதான இருக்க வேண்டும். இதற்காக வடிகால் கட்டமைப்பு, விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் பக்கவாட்டு தடுப்பு சுவர் ஆகியவற்றை அமைக்க வேண்டும். இதற்காக கலெக்டர், திட்ட இயக்குனர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன். ஒரு மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படவுள்ளது’ என்றார்.

Tags : Naganadi Bridge ,
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...