×

சேர்வைக்காரன்மடம் பகுதியில் சட்ட விரோத குடிநீர் விற்பனைக்கு தடை கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி, பிப்.11: சேர்வைகாரன்மடம் பகுதியில் நடந்து வரும் சட்ட விரோத குடிநீர் விற்பனையை தடுக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.சேர்வைகாரன்மடம் கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சி, லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு கிணறுகளில் நீர் வற்றி போய் விட்டது. விவசாயத்தை தவிர்த்து கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியூரை சேர்ந்த நபர்கள் எங்கள் பகுதியில் பிளாட் வாங்கி குழாய் போட்டு தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக இதற்கெதிராக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து நிலத்தடிநீரை உறிஞ்ச தடை விதித்து உத்தரவிட்டும், கலெக்டர் ஆழ்துளை கிணறுக்கு சீல் வைத்துநீர் உறிஞ்சுவதை தடுத்தார். தற்போது, அந்த சீலை சிலர் அகற்றி விட்டு மறுபடியும் சட்ட விரோத தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். எனவே கலெக்டர் தக்க நடவடிக்கை எடுத்து சட்ட விரோத குடிநீர் விற்பனையை தடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு