×

தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய விழா

தூத்துக்குடி,பிப்.11: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நடந்தது.தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா கடந்த 31ம் தேதி  கொடியேற்றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாட்களில்  திருப்பலிகள் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக கடந்த 8ம் தேதி  காலை 6 மணிக்கு அன்னையின் ஆலயத்தில், பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அன்று மாலை 6 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி  முதன்மைக்குரு ரோலிங்டன் தலைமையில் நடைபெற்றது. புனித யூதா ததேயு ஆலயத் பங்குதந்தை  ஜோ “பிறருக்காக நேரம் செலவழிப்போம்” என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார்.புனித சவேரியார் மேனிலைப்பள்ளியின் தாளாளர் இஞ்ஞாசி, தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர், பங்குதந்தையர்கள் லெயோலா டிரோஸ், உபார்ட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்துச்சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவிழா சிறப்பு ஆடம்பரத்திருப்பலி, தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி நடுவ இயக்குநர் ஸ்டார்வின் “செபிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வோம்” என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார். தூத்துக்குடி மறைமாவட்ட இளையோர் பணிக்குழு இயக்குநர் சதீஷ்குமார், இத்தாலி நாட்டு பங்குதந்தை ஸ்டீபன் முன்னிலை வகித்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
அன்று காலையில் புனித லூர்து அன்னை இளையோர் நடத்திய விளையாட்டு போட்டிகளும், மாலையில் நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கும் திருநிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்பியங்கள் இணைந்து வழங்கிய கலைவிழாவும் நடந்தன.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் பங்குப் பேரவையினர் செய்திருந்தனர்.

Tags : St. Lourdes Mother Temple ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...