×

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்களை மூடாததால் வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூர், பிப். 11: திருவாரூரில் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாததன் காரணமாக பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் உரிய தரத்துடன் மேற்க்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கென நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல வருடங்களை கடந்த பின்னரும் தற்போது வரையில் சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

அதன்படி நகராட்சி 12வது வார்டுக்குட்பட்ட எடத்தெருவில் இதேபோன்று கழிவு நீரேற்றும் நிலையம் அமைப்பதற்காக பள்ளம் தொன்டப்பட்டு அதில் கழிவுநீரேற்றும் கிணறு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில் இதற்காக தோண்டப்பட்ட பள்ளமானது சரிசெய்யப்படாததன் காரணமாக தினந்தோறும் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் இந்த சாலையினை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களும் தினந்தோறும் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வருவதால் இந்த சாலையினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,ditches ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...