×

ஊத்துமலையில் டாஸ்மாக் மதுக்கடையை குடியிருப்பு பகுதிக்கு மாற்ற மக்கள் எதிர்ப்பு

தென்காசி, பிப். 11:  தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மொத்தம் ஆயிரத்து 63 மனுக்கள் ெபறப்பட்டது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் மரகதநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, கோட்டாட்சி தலைவர் பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் துறையினர், தாசில்தார்கள்,  நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், யூனியன் அதிகாரிகள், கல்வித் துறை, வனத்துறை, காவல்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஊத்துமலையை சேர்ந்த அனைத்து தாழ்த்தப்பட்டோருக்கான கூட்டமைப்பின் தலைவர் நெல்லையப்பர் தலைமையில் சிலர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,: ஊத்துமலையில் ஊருக்கு வடக்கு பகுதியில் இயங்கி வரும் மதுபானக்கடையை ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தக் கடை அருகில் தாழ்த்தப்பட்ட பெண்களும், பொது மக்களும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் தண்ணீர் எடுக்கச் செல்லும் தாழ்த்தப்பட்ட பெண்களும் மக்களும் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே மதுபானக்கடையை தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு வரவிடாமல் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் அளித்துள்ள  மனுவில்,  கேரளாவில் இருந்து வரும் கேரள அரசு பேருந்துகள் அனைத்தும் தென்காசி நகருக்குள் வராமல் இலஞ்சி வழியாக நேரடியாக புதிய பேருந்து நிலையம் சென்று விடுகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் தென்காசி வரும் பயணிகள் வேறொரு பேருந்து மூலமாக தென்காசி நகருக்குள் செல்லவும், தென்காசி நகரில் இருந்து கேரளா செல்லும் பயணிகள் வேறொரு பேருந்தில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்று கேரளா பேருந்தில் ஏறுகிற நிலை உள்ளது .எனவே கேரள பேருந்துகள் அனைத்தும் தென்காசி நகரின் வழியாக கேரளா செல்லவும், கேரளத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இலஞ்சி மார்க்கமாக புதிய நிலையம் செல்வதை தவிர்த்து தென்காசி நகரத்திற்குள்  வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்காசியில் நான்கு ரத வீதிகளில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளை மருந்து மாத்திரைகள் வெளியே வாங்க சொல்வதை கைவிட்டு அனைத்து மருந்து மாத்திரைகளும் மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அச்சன்புதூர் கிளை தலைவர் சுலைமான் அளித்துள்ள மனுவில் அச்சன்புதூரில் மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்குகளின் தானியங்கி பெட்டிகள்  ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக மாற்றி வைக்க வேண்டும். மேலும் அச்சன்புதூர் கிளை அஞ்சல் நிலையத்தை துணை அஞ்சலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கீழப்பாவூர் ஒன்றியம் பூலாங்குளத்தைச் சேர்ந்த முருக லட்சுமி தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், கீழப்பாவூர் ஒன்றிய பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 1500  வீடுகளுக்கு  மேல் உள்ளன.  தற்போது எங்கள் ஊருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்  நிறைவேற்றப்பட்டு அதன் வேலை முழுமையாக நிறைவு பெறாததால்எங்களுக்கு ஆத்து தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே இதன் வேலையை  முழுமையாக நிறைவு பெறச் செய்து தண்ணீர் கிடைத்திடவும்,  வீட்டு நல்லி வழங்க வேண்டும்.  மேலும் எங்களுக்கு ஏற்கனவே பாப்பான்குளத்திலிருந்து ஆத்துத் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.  அது இப்பொழுது சரிவர வரவில்லை. அதனை சரிசெய்து எங்களுக்குத் ஆத்து தண்ணீர் வழங்கிடவும் அதன் மூலம் வீடுகளுக்கு நல்லி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாயுள்ளனர்.

 ஆலங்குளம் ஒன்றிய பாஜ சார்பில்  நல்லூர் பஞ்சாயத்து பாஜ நகர தலைவர் சிம்சன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  நல்லூர் பஞ்சாயத்தில் சுமார் 12 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.  எங்களது குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் பற்றாக்குறை காரணமாக நல்லூர் பஞ்சாயத்தில் தெற்கே சமுதாயக் கிணறு வெட்டப்பட்டது. இந்தக் கிணறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மூலமாக வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கிணறு ஆனது சரியான முறையில் வெட்டப்படவில்லை. கிணற்றின் சுற்றளவானது கீழே போகப்போக குறுகிக் கொண்டே போகிறது. கிணற்றின் சுற்று நடைபாதை சுவரானது கட்டப்பட்ட இரண்டு மாதங்களிலேயே இடிந்து தரைமட்டமாகி விட்டது. இந்த கிணற்றின் வட பகுதியில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை இடிந்து தண்ணீருக்குள் விழுந்து கிடக்கிறது.   மழைக்காலத்தில் ஓடையில் உள்ள மழை நீரானது கிணற்றுக்குள் போகும்பொழுது கிணற்றில் நீர் மாசடையும் சூழல் ஏற்படும். அதனால் அந்த நீரை மக்கள் பருகும்போது சுகாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளனர்.மேலகரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு நன்னகரம் பிள்ளையார் கோவில் தெரு, ராமர் கோவில் தெரு, தென்வடல் தெரு, பார்க் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாறுகால் கால்கள் மற்றும் தெரு விளக்குகள், அடிபம்புகள் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர்.

தென்காசி நகராட்சி 1வது வார்டு முன்னாள் உறுப்பினர் ராமராஜ் அளித்துள்ள மனு: தென்காசி நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடித்து பல ஆண்டுகள் ஆகிறது. எனவே தென்காசி நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும். தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு மெயின்ரோட்டில் இருந்து புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் வரை உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 108 ஆம்புலன்சில் வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.முன்னதாக கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 மாதந்திர உதவித் தொகைக்கான ஆணையும், 10 பயனாளிக்கு இலவச தேய்ப்பு பெட்டியும், 8 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், முதலமைச்சா் பொது நிவாரண நிதியின் மூலம் பாம்பு கடியால் உயிாிழந்த சிவகிாி தாலுகா அர்ச்சுணன் மனைவி செல்வகாளிக்கும், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிவகிாி தாலுகா விஸ்ணு தந்தை அர்ச்சுணன் என்பவருக்கும்  1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.

Tags : liquor store ,Othumalai ,
× RELATED கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு