×

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் தண்ணீர்

திருக்காட்டுப்பள்ளி, பிப்.11: திருக்காட்டுப்பள்ளி கடைவீதி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள், விவசாயிகள் விளைபொருட்கள் வாங்கவும், விற்கவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்ற பகுதியாகவும் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி உள்ளது. செங்கரையூர் - பூண்டி பாலம் திறக்கப்பட்ட பிறகு திருச்சி மாவட்ட மக்கள் பயன்பாடும் அதிகமாகி விட்டது. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளிக்கு புதிய சுற்றுசாலை அமைக்கப் படாததால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த கடை வீதி வழியாகத்தான் புதுக்கோட்டை, தஞ்சை, கல்லணை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் பெரிய ஆழ்குழாய் குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் தண்ணீர் குழாய்களில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டிலும், சாக்கடையிலும் கலந்து வீணாகிறது.

தற்போது திருக்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகே கடைவீதியில் சாலையின் அடியில் கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து கடந்த 6 நாட்களாக தண்ணீர் ரோட்டில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு மிகவும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பேருந்துகள் பாதசாரிகள் மீது வாரி இறைத்து செல்கின்றன. தொடர்ந்து இச்சாலையில் வாகனங்கள் செல்வதால் மேலும் குழாய் சேதமடைந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறக்கூடும். எனவே கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி விரைவாக உடைப்பை உடனே சீர்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : road ,breakdown ,school road ,Tirukkattupalli ,
× RELATED ஆலங்குளம் அருகே பயங்கரம் இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை