×

சீசன் துவங்கியதால் தஞ்சை குடைமிளகாய் விற்பனைக்கு வந்தது

கும்பகோணம், பிப்.11: சீசன் தொடங்கியதால் தஞ்சை குடை மிளகாய் விற்பனைக்கு வருகை. தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் மட்டும் விளையும் குடை மிளகாய் சீசன் தொடங்கியதால், கும்பகோணத்தில் விற்பனைக்காக வந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலானோர் பழைய சோறும், மிளகாய் வற்றலை வறத்து சாப்பிடுவார்கள். இதனால் உடலில் வெப்பம் தணியும்.
அனைத்து வகையான மிளகாய்கள் இருந்தாலும், தஞ்சை குடை மிளகாய், பழைய சோறுக்கும் இணையாகும். இதனால் தஞ்சை மாவட்டமில்லாது, வெளி மாவட்ட, மாநில, நாடுகளுக்கும், அவர்களது உறவினர்கள் தேடிப்பிடித்து பக்குவப்படுத்தி, குடைமிளகாயை வாங்கி பதப்படுத்தி அனுப்பி வைக்கும் பழக்கும் காலம்காலம் தொட்டு இன்றளவும் நடக்கிறது.

கோடை காலத்திற்கேற்ற குடை மிளகாய், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானுார்பட்டி, வல்லம், மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் மானாவாரி நிலத்தில் குடை மிளகாய் விளையக்கூடியதாகும். கடந்த மார்கழி மாத பட்டத்தில் நடவு செய்து, தற்போது செடிகள் வளர்ந்து , குடை மிளகாய் காய்த்துள்ளது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் குடை மிளகாய் சீசன் தொடங்கும். இங்கு விளையும் குடை மிளகாய்கள் தமிழகம் மட்டுமில்லாது, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சீசன் தொடங்கிய நிலையில் தஞ்சையில் சாகுபடி செய்து விளைந்த குடை மிளகாய் கும்பகோணம் பகுதிக்கு விற்பனைக்காக வந்துள்ளது.

பொதுமக்கள், குடை மிளகாயை வாங்கி வந்து உலர்த்தி , காயவைத்து குடை மிளகாயில் துளையிட்டு, மோரில் ஊறவைத்து மீண்டும் வெயிலில உலர்த்தி வைத்து பதப்படுத்தி விடுவார்கள். இது போல் பக்குவமாக செய்தால், ஓராண்டு ஆனாலும் கெட்டு போகாமலும் சுவையாக இருக்கும். கடந்தாண்டு சீசன் நேரத்தில் கிலோ ரூ. 80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சீசன் தொடங்கிய நிலையில் அதிக வரத்து இருப்பதால் தற்போது கிலோ குடை மிளகாய் ரூ. 50 விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மழை அதிகமாக பெய்துள்ளதால் குடை மிளகாய் அதிக வரத்து இருந்தால் குடை மிளகாய் விலை ரூ. 30 வரை குறையவதற்கு வாய்ப்புள்ளது என மிளகாய் வியாபாரி தெரிவித்தார்.

Tags : season ,Tanjore ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு