×

நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நேரடியாக கூலி வழங்க வேண்டும்

தஞ்சை, பிப்.11: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அலுவலக கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு, மாநில செயலாளர் பாலையன் தலைமையில் நடைபெற்றது. சங்க மாநில பொதுச்செயலாளர் கள் சந்திரகுமார், புண்ணீஸ்வரன், பொருளாளர் கோவிந்தராஜன், இணைப்பொதுச்செயலாளர் குணசேகரன், செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகேசன், கிருஷ்ணன் துணைத்தலைவர் ராஜ்மோகன் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொள்முதலில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அதனை போக்க வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளுக்கு காரணம் அங்கு பணிபுரிகின்ற கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் காரணம் என அவர்கள்மீது குறைபாடுகளை சுமத்திவிட்டு அதிகாரிகள் தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் உண்மை நிலைமை வேறு.மேலிருந்து வழிகாட்டுதல் அடிப்படையில் தான் இந்த கொள்முதல் நடைபெறுகிறது. எனவே குறைபாடுகளை களைய மேல் இருந்து நடவடிக்கை எடுத்து கீழ்மட்டம் வரை அதனை சரி செய்ய வேண்டும். குறிப்பாக லாரி அனுப்புவதற்கு ரூ.1,500 வரை லாரி டிரைவர் கூடுதலாாக கொடுத்தால்தான் மூட்டைகளை ஏற்றிச் செல்கிறார்கள்.

அதேபோல கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் ஏற்படுகிறது. அதனால் எடை குறைவு ஏற்படுகிறது. இதனை நிர்வாகம் பரிசீலித்து ஏற்க வேண்டும்.சில ஆயிரங்கள் சம்பளம் பெறுகின்ற பணியாளர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சொல்லி கட்டாயப்படுத்தி வசூலிக்கிறது. மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ 1.62 வழங்கப்படுகிறது. இதே வேலைக்கு தனியார் ரூ10 வரை கூலி கொடுக்கின்றனர். எனவேதான் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாக தெரிவித்து 21 அம்ச கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நன்கொடை வசூலிப்பதை நிறுத்த தாங்களே முன்வரவேண்டும். விவசாயிகளும் தரமான நெல் விற்பனை செய்வதை உறுதிபடுத்தவும் வியாபாரிகள் பயன்படுத்தி கொள்வதை தடுக்கவும் வேண்டும். இதுபோன்ற கூட்டு முயற்சியின் மூலமாகத்தான் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை களைய முடியும். இந்த ஆக்கபூர்வ நடவடிக்கைக்கு கொள்முதல் பணியாளர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும்ஆதரவு தர தயாராக உள்ளோம். கொள்முதலை முறைப்படுத்த வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நேரடியாக கூலி வழங்க வேண்டும் நுகர்பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்றபணியாளர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் தவிர்த்து குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,000 வழங்க உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Consumers ,
× RELATED கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை...