×

கடலூர் மாவட்டத்தில் விபத்து, உயிரிழப்புகள் குறைந்தது

கடலூர், பிப். 11: கடலூர் மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாட்டில் வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதனால் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சென்னை- திருச்சி, சென்னை- கும்பகோணம், சென்னை-நாகப்பட்டினம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக செல்கின்றன. கடலூர் மாவட்டத்தில் சாலைகள் தரமற்று இருந்ததாலும், சாலை விதிமுறைகள் கடை பிடிக்கப்படாததாலும் கடந்த காலங்களில் ஆண்டு தோறும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் நிகழ்ந்து வந்தன. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டினை விட 2019ம் ஆண்டு விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக காவல்துறையின் ஆண்டு புள்ளி அறிக்கை விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கடலூர்  மாவட்டம் முழுவதும் 2018ம் ஆண்டில் மோட்டார் வாகன விதிமீறல் வழக்குகளாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,601 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 6,962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2018ம் ஆண்டில் 1,11,344 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 2,70,958 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதர பிரிவுகளின் கீழ் 2018ம் ஆண்டில் 1,15,683 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 1,34,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அபராத தொகையாக 2018ம் ஆண்டில் ரூ.3.53 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டில் ரூ.4.18 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

 சிறுகாயங்கள் ஏற்படுத்திய சாலை விபத்துகளாக 2018ம் ஆண்டில் 3,048 விபத்துகள் நிகழ்ந்தது. இதில், 4,371 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2019ம் ஆண்டில் 2,421 விபத்துகள் ஏற்பட்டதில் 3,248 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.
 கடந்த  2018ம் ஆண்டில் 415 விபத்துகளில், 449 பேர் இறந்துள்ளனர். 2019ம் ஆண்டு 403 சாலை விபத்துகள் நடந்ததில் 423 பேர் இறந்தனர். கடந்த 2018ம் ஆண்டினை விட 2019ம் ஆண்டில் விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறைந்ததற்கு அதிகப்படியான மோட்டார் வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டதும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதுமே காரணமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், சாலைகளின் முக்கிய பகுதிகளில் விபத்தினை குறைக்கும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலூர் மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் சாலை விதிமுறைகள் மற்றும் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்துதல் மற்றும் கண்காணித்தல் திட்டங்களின் படி கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

Tags : Accident ,Cuddalore district ,
× RELATED இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு...