×

என்எல்சி தலைமை அலுவலகத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

நெய்வேலி, பிப். 11:நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக புதிய என்எல்சி அதிபர், ஒரு குழு அமைத்து   அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்களான சிஐடியு, தொமுச ஆகிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இப்பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டதால் அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்  தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் என்எல்சி செயல் இயக்குனர்  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக 10 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் நேற்று நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு என்எல்சி தரப்பில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் 303 பேர் பணிநிரந்தரம் செய்ததாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.130 முதல் 158 வரை  ஊதிய உயர்வு வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், இதனை ஏற்றுக் கொள்ளாமலும்,  குறுஞ்செய்தியை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைமையில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து என்எல்சி நிர்வாகம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்பேரில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்களான தொமுச மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. இப்பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் நாளை (இன்று) திட்டமிட்டப்படி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

Tags : Protest workers ,headquarters ,NLC ,
× RELATED சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்