×

மணல்மேட்டில் மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் மறியல் ேபாராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவோம்


நாகை,பிப்.11: மயிலாடுதுறை அருகே மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்தால் பெண்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று நாகையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விபரம்: மயிலாடுதுறை அருகே மணல்மேடு மாரியம்மன்கோயில் தெரு குடியிருப்போர் மற்றும் கிழாய்ரோடு குடியிருப்போர் சங்கம் சார்பில் 30க்கும் அதிகமானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதில் மணல்மேடு களத்தூர் ரோடு 15வது வார்டு குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் ஏற்கனவே டாஸ்மாக் கடை அமைந்திருந்தது. இந்த கடை கடந்த 2017ம் ஆண்டு பொதுமக்கள் எதிர்ப்புக்கு இடையே மூடப்பட்டது. இந்நிலையில் அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்த வருகிறது. கடை அமையவுள்ள இடம் அருகே தீயணைப்பு நிலையம், பள்ளிக்கூடம், கோயில்கள் என்று பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடம் அமைந்துள்ளது.

எனவே இந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமையக்கூடாது. மீறி டாஸ்மாக் கடை திறந்தால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீர் செய்ய வேண்டும்: வில்லியநல்லூரைச் சேர்ந்த சரவணன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், வில்லியநல்லூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பைப் லைன் செல்கிறது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே இதை சீர் செய்ய வேண்டும். அதே போல் வில்லியநல்லூர் அக்ரகாரம் தெருவில் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 40 ஆண்டு காலம் பழமைவாய்ந்த கட்டிடம். மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மேற்கூரையை சீர் செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

குடிமனை பட்டா கேட்டு மனு:
பொறையார் அருகே சீனிவாசா காலனியை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். இதுவரை வீட்டுமனை படடா இல்லை. எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஒக்கூர் அருகே விளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் வசித்து வருகிறோம். வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 3 ஆண்டு காலமாக மனுக்கள் கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே விளாம்பாக்கம் பகுதி பொதுமக்கள் நலன் கருதி விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேகனூர் ஊராட்சியில் பணி நீக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு:
கீழ்வேளூர் அருகே மேகனூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மேகனு£ர் ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்று தலைவராகியுள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து இஷ்டம் போல் செயல்படுகிறார். பல ஆண்டு காலமாக பணியாற்றி வந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர் உட்பட 3 பேரை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளார். இவ்வாறு பணிநீக்கம் செய்தவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : task shop ,Sandmeath ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்...