×

கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

திருப்பூர், பிப்.11:திருப்பூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் வேலை பார்க்கும் இடங்களில் வசிக்காமல் வெளியூரிலிருந்து வருவதால் பொது மக்களுக்கு உரிய காலத்தில் சான்றிதழ்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் இடமாற்றத்தால் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய தாலுகாவில் 313 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை பார்க்க வேண்டிய இடங்களில் 253 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை பார்க்கின்றனர். 60 கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள கிராமங்களில் அருகில் வேலை பார்க்கும் கிராம நிர்வாக அலுவலர் கூடுதலாக அக்கிராமங்களையும் பார்த்து வருகிறார். சாதிச்சான்று, வருமானம், இருப்பிடம், சொத்து, பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்டம் பெற விண்ணப்பிக்கும் பயணாளிகளின் முழு விபரங்களை அறிந்து உரிய சான்றிதழ்கள் பெற வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய மிகவும் முக்கிய பணியில் உள்ளனர்.கடந்த காலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் வேலை பார்க்கும் கிராமங்களில் குடும்பத்துடன் தங்கி பொது மக்களுக்கு  எந்நேரமும் சந்தித்து சேவை செய்து வந்தனர். கிராமங்களில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அறிந்து  உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர். தற்போது கணவன், மனைவி ஆகியோர் அரசு வேலையில் இருப்பதால் தங்களுடைய குழந்தைகளை நகரில் இயங்கும் தனியார் பிரபலமான பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்காக நகர் பகுதியில் வீடு கட்டி வசிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை பார்க்கும் கிராமங்களில் தங்காமல் வெளியூரிலிருந்து தினமும் வருகின்றனர். இதனால், அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு முறையாக வருவதில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் 253 கிராம நிர்வாக அலுவலர்களில் 150க்கும் மேற்பட்டோர் இளம் வயது பெண்  கிராம நிர்வாக அலுவலர்களாக உள்ளனர். இதி்ல், கடந்த 5 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி  வேலைக்கு சேர்ந்துள்ளனர். பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் வெளியூரிலிருந்து வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை. இதனால், கையெழுத்துக்காக வரும் பொதுமக்கள் பல மணி நேரமாக காத்திருக்கவேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில்  மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் சென்றுள்ளதால் இன்று அலுவலகத்திற்கு வரமாட்டார் என்ற பதில் வருகிறது.  இதனால், பல மணி நேரமாக காத்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.  உரிய காலங்களில் உரிய ஆவனங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை பார்க்கும் இடங்களில் குடும்பத்துடன் தங்கி பொது மக்களுக்கு சேவை செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Tags : Village Administrative Officers ,
× RELATED ஸ்டான்லி மருத்துவர் சந்திரசேகர்...