×

காதலர்களின் சரணாலயமாக மாறும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு, பிப்.11: ஈரோடு அருகே வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயம், தற்போது காதலர்களின் சரணாலயமாக மாறி வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. 215 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த சரணாலயத்தில் தண்ணீர் இருக்கும் காலக்கட்டங்களில் பல்வேறு பறவை இனங்கள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து பின்னர் சீசன் முடிந்த பிறகு சென்று விடுகிறது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்கிறது. ஆண்டுதோறும் சுமார் 35 ஆயிரம் பறவைகள் வரை வந்து செல்கிறது. இந்த பறவைகளை காணவரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம், குறைந்து வருகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் வெறிச்சோடி காணப்படும்.தற்போது இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் 4 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை எந்த பணிகளையும் முழுமையாக முடிக்காமல் உள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு தற்போது காதலர்களின் சரணாலயமாக இது மாறி வருகிறது. பகல் நேரங்களில் ஜோடி, ஜோடியாக இங்கு காதலர்கள் வந்து செல்கின்றனர். தனிமையை தேடி வரும் இவர்கள், ஒதுக்குபுறமான இடங்களில் ஒதுங்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழுவதற்கு முன்பாக இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : White Bird Sanctuary ,lovers ,
× RELATED வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு