×

விபத்துகளை தவிர்க்க மேம்பாலங்களில் வாக்கிங் செல்ல தடை

கோவை, பிப்.11:  கோவை நகரில் மேம்பாலங்களில் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்கவேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு நேற்று கூறியதாவது: கோவை நகரில் மேம்பாலங்களில் அதிகாலை நேரத்தில் வாக்கிங், ஜாக்கிங் செல்வோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலர் காதில் ஹெட்போன் மாட்டி கொண்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டே செல்கின்றனர். பின்னால் வரும் வாகனங்களை நடைபயிற்சி செய்பவர்கள் கவனிப்பதில்லை. ரோட்டில் திரும்பும் போதும் வாகனங்கள் வருவதையும், ஹாரன் அடிப்படையில் சிலர் கவனிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படும் நிலையிருக்கிறது. காந்திபுரம் புதிய மேம்பாலம், கணபதி மேம்பாலம், ஒண்டிப்புதூர், சுங்கம், அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் உள்ளிட்ட நகர் பகுதி மேம்பாலங்களில் வாக்கிங் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என தெரிவித்திருக்கிறோம். நகரில் 51 சிக்னல்களை சீரமைக்க, மேம்படுத்த அரசிடம் 4.25 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் சிக்னல் சீரமைப்பு பணி சிறப்பாக நடத்தப்படும். திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. விரைவில் மேம்பால தூண்களை இணைக்க கர்டர்கள் பொருத்தப்படவுள்ளது. இந்த பணி நடக்கும் போது போக்குவரத்து மாற்றம் செய்து தரவேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுள்ளனர்.

கர்டர் இணைக்கும் பகுதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்து வேறு பாதையில் வாகனங்களை திருப்பி விட திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுபாதையில் உள்ள இடையூறுகளை களைந்து போக்குவரத்தை எளிதாக்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பீளமேடு ஐ.டி பார்க் ரோட்டில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக அந்த பகுதி ரோட்டில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி ஏர்ஹாரன், எல்இடி விளக்கு பொருத்தி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முத்தரசு கூறினார்.

Tags : accidents ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...