×

மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தை

மேட்டுப்பாளையம், பிப்.11: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, பசு மாட்டை கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சிட்டேபாளையம் கிராமத்தில் விவசாயிகள் கால்நடைகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இதுஒருபுறம் இருக்க, தற்போது இந்த கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிட்டேப்பாளையத்தில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் விவசாயி முருகன் என்பவர் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளதுடன் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர், நேற்று இரவு தனது வாழை தோட்டத்தில் பசு மாட்டை கட்டி வைத்துவிட்டு அருகில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். இரவு அங்கு மாடு அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது மாட்டை, சிறுத்தை ஒன்று அடித்து இழுத்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன், சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடிவந்து சிறுத்தையை விரட்டி பசுமாட்டை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் சிறுத்தை, மாட்டை பாதி சாப்பிட்டு தப்பியது. இதுகுறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம் அப் பகுதி மக்கள் மாட்டை வேட்டையாடிய சிறுத்தை கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : farm ,Mettupalayam ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது