×

க.பரமத்தி அடுத்த துலுக்கம்பாளையத்தில் கோழிப்பண்ணையால் தொற்று நோய் பரவும் அபாயம்

க.பரமத்தி, பிப்.11: க.பரமத்தி அடுத்த துலுக்கம்பாளையம் தனியார் கோழிப்பண்ணையிலிருந்து அதிகளவில் ஈக்கள் உருவாகி பல்வேறு கிராமத்திற்குள் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் நடந்தை ஊராட்சி துலுக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் சமீப காலமாக அதிகளவில் ஈக்கள் உருவாகி அருகே உள்ள 30 மேற்பட்ட கிராமங்களுக்குள் சென்று அவர்களின் வீடுகளில் ஈக்கள் பலவித பொருட்களில் மொய்க்கிறது. இதனால் பல இன்னல்கள் ஏற்படுகிறது.

இந்த உணவுகளை பெண்கள், குழந்தைகள் சாப்பிடும்போது வாந்தி, பேதி வருவாகி பல சிரமத்திற்கு ஆளாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குறை கூறுகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அப்போது 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு ஈக்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். மீண்டும் ஈக்கள் உருவாக ஆரம்பித்ததால் கடந்த 1 மாத காலமாக ஈக்களால் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குறை கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல அதிகளவில் ஈக்கள் உருவாகி இதனை கட்டுப்படுத்த கோழிப்பண்ணை நிர்வாகம் தவறியதால் சுற்று பகுதி 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டங்கள் நடத்திய பிறகு ஈக்கள் உருவாவதை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது ஈக்கள் பலவித பொருட்கள் மீது மொய்க்கிறது. இதனால் பல சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : poultry farm ,Dulukampalayam ,
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...