×

ரூ.183.83 கோடி மதிப்பீட்டில் பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் பணி

ஈரோடு, பிப்.11: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, பெரும்பள்ளம் ஓடையை சீரமைத்து சாக்கடை நீர் கலக்காத வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.183.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.  அதன்படி, செம்மாம்பாளையம் தரைமட்ட பாலம் முதல் காரப்பாறை, புதுக்காலனி, பால்காரர் தோட்டம், செங்கோடம்பாளையம் வழியாக காமராஜ்நகர் தரைமட்ட பாலம் வரை பெரும்பள்ளம் ஓடையினை தூர்வாரி பூங்கா உயர்மட்ட பாலம் என 2.85 கி.மீட்டருக்கு ரூ.31.50 கோடி மதிப்பீட்டிலும், காமராஜர் நகர் முதல் வள்ளியம்மை நகர், அணைக்கட்டு நல்லியம்பாளையம் வழியாக அணைக்கட்டு தடுப்பணை வரை பெரும்பள்ளம் ஓடையினை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைத்து இருபுறமும் நடைபாதை, சாலை மேம்பாடு என 2.25 கி.மீட்டருக்கு ரூ.32.50 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.2ம் பகுதியாக சூரம்பட்டி அணைக்கட்டு பாலம் முதல் கிராமடை பாலம் வரை தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைத்து பூங்கா, உயர்மட்ட பாலம், நடைபாதை என 2.10 கி.மீட்டருக்கு 33.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கிராமடை பாலம் முதல் காந்திஜி ரோடு வரை 1.30 கி.மீட்டருக்கு 24.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காந்திஜி பாலம் முதல் ரயில்வே பாலம் வரை 1.70 கி.மீட்டருக்கு 29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ரயில்வே பாலம் முதல் பெரும்பள்ளம் ஓடை முடிவு வரை 1.55 கி.மீட்டருக்கு 26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு காரைவாய்க்கால் அண்ணா டெக்ஸ் பகுதியில் தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு உயர்மட்ட பாலமாக கட்டுமான பணிகள் துவங்கி உள்ளது. மேலும், ஆங்காங்கே ஓடையின் அகலம் அளக்கப்பட்டு புதர்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 18 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர் பெரும்பள்ளம் ஓடை வழியாக வந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.இந்த ஓடையில் குடியிருப்பு கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்து வந்ததால் ஓடை பல இடங்களில் புதர்மண்டியும், கழிவுநீர் தேங்கியும் உள்ளது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.183.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 12 கி.மீட்டருக்கு ஓடை சீரமைப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. ஆங்காங்கே பாலங்கள், பூங்காக்கள், நடைபாதைகள், சிறு, சிறு தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது.
இந்த ஓடையில் கழிவுநீர் கலக்காத வகையில் 8 ஆயிரம் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஓடையின் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்கும்போது நல்ல நீராக ஓடையில் வரும். இதனால், ஓடையை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது. தற்போது, துவங்கப்பட்டுள்ள இந்த பணிகள் 18 மாத காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Most ,
× RELATED அமெரிக்க வரலாற்றில் 3-ஆவது...